Thursday, June 20, 2013

பனித்துளியின் கருணையில்..

நீண்ட நாள் வாட்டிய
தனிமையிலிருந்து தப்பித்து
எண்ணமற்று
சோகத்தின் அடி ஆழத்தில்
அசையாது நிலைத்திருக்க
எங்கோ சென்று
ஒளிந்து கொண்டான் கவி!
விடாது விரட்டிய
எண்ணங்களுக்கும் அவனுக்கும்
இடையே - பெரும்
போராட்டம்..
'பணயமாக மானத்தைக் கொடு' என
எதேச்சையாக கேட்டு
தீர்க்கமாகப் பார்த்தன எண்ணங்கள்..
இல்லை,
'உறக்கமற்று கொடுங்கனவில்
தொலைந்து போ' என
ஏளனம் வேறு..
கனவின் சாட்சியாக
சில எண்ணங்கள் பல்லிளித்தன..
மறைத்த குரல்கள்
முன்பு எப்பொழுதையும் விட
துல்லியமாக
காதருகே ஒலித்தன..
மறந்த சில முகங்களும்
சமயம் பார்த்து
வெடுக்கிட்டு திரும்புவதாய்த்
தோன்றின..
சுகம் கொடுத்த
வருடிய நகங்களும்
முகம் மறைத்து
மோகத்தில் மூழ்கடித்த
கருங்கூந்தலும் கூட
தொலைதூரத்தில்
தப்பித்து ஓட,
விட்டுச் சென்ற வாசம் மட்டும்
விடாமல் வதைக்கிறது..
 காலடியில் ஈரம் சேர்க்கும்
பனித்துளியின் கருணையில்
நிறுத்தி வைத்திருந்த கவிதையை
எழுத எத்தனிக்கிறான் - கவி!


Saturday, May 11, 2013

ஒரு பாக்கட் நேர்மை பார்சல்!!!

                          "அவருக்கு மட்டும் சீட் குடுக்கறீங்க, எனக்கு ஏன் தர முடியாது ? என்ன பாத்தா எப்படி இருக்கு?"
                           "உன்னலாம் பாக்க முடியாது..உன் மூஞ்சி பாக்குற மாதிரி இல்ல..போ போ !"
                              டிக்கட் பரிசோதகருக்கும் ஒரு பயணிக்குமான இன்றைய பயணத்தின் உரையாடல் இது. ஒரு நேர்மையான அதிகாரியாக முதல் பார்வையிலேயே என்னுள் பதிந்து போயிருந்தார் அவர். மூன்றாம் வகுப்பு டிக்கட் எடுத்து கூடுதல் கட்டணம் கட்டி நான் இரண்டாம் வகுப்பு இருக்கை வாங்கி முடிக்கும்போது தான் இந்த சண்டை ஆரம்பித்தது.
                                பார்க்க முடியாத மூஞ்சிக் காரர் ஒரு காவல்துறை ஆய்வாளராம். அவர் தன் பதவி பற்றி கூறியும் டிக்கட் பரிசோதகர் அசரவில்லை. "நீ போலீஸ்-னா நான் சீட் தரணுமா? , போய் எங்க உக்காரணுமோ அங்க உக்காரு..."
                                ஆய்வாளர் செல் போன எடுத்து வீடியோ பிடிக்கிற மாதிரி நடிச்சார்.."நல்லா வீடியோ எடுத்து தினசரி பாரு, புத்தி வரும்..வேணும்னா என் போட்டோவ உன் வீட்டுல மாட்டி வச்சுக்கோ.."
                                ஆய்வாளர் வாய பொளந்துட்டார். "நான் இங்க தான் இருப்பேன் ..நீ என்ன பண்ணுற பாக்குறேன்.."
                                 எதுக்காக அந்த பரிசோதகருக்கு அவ்வளவு கோபம்? தன்னுடைய நேர்மைக்கு அங்கீகாரம் தேடுகிறாரா? இல்லை வளைந்து கொடுப்பதின் கேவலத்தை மற்றவருக்கு உணர்த்த முயல்கிறாரா? நான் கொடுக்க வேண்டிய பதினைந்து ரூபாய்க்கு சில்லறை இல்லாததால் இருபதாய்க் கொடுத்தேன்.."அஞ்சு ரூபா சில்லறை இல்ல, சில்லறை கொடு" என்றார்..கொடுங்க என்று மரியாதையாய் பேசுகிற ஆளும் இல்லை அவர்.."இருபது வாங்கிக்கோங்க சார், அப்பறமா நானே வந்து மீதி வாங்கிக்கிறேன்" என்றதற்கு, "நீ வாங்காமப் போய்டுவ, சில்லறை கொண்டு வந்து டிக்கட் வாங்கிக்கோ.."என்றார்...எனக்கு புன்முறுவலும் ஆச்சரியமும் முந்திக்கொண்டு வர, சில்லறைக்காக துணை தேடி இருந்தேன்..
                              மூன்று மணி நேர பயணத்தில் என் மனம் முழுதும் அவர் நடத்தை சார்ந்த சிந்தனை தான் ஓடியது..இத்தனை நிகழ்ந்தாலும் அவர் என்னைப் பார்த்த போதெல்லாம் ஒரு புன்னகை விடுத்தார்.
                               இருவேறு உச்சகட்ட நடத்தைகளைப் பார்த்து, ஆராய்ந்து, சுலப விடை கிடைக்காமல் இரயில் நிலையத்திலிருந்து வெளியேறி ஓர் பேருந்தில் ஏறி அமரவும் ஒரு ஆண் குரல். "ஒரு பொங்கல் இருபத்தஞ்சு ரூபாவா? அநியாயம்..பெங்களூர்ல இருபது ரூபாதான்..அதுவும் நெறைய கொடுப்பான்..சரியில்ல..சரியில்ல..பொங்கல் விலை ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுக்கு சொல்றான்..அப்பப்பா, சரியில்ல..சரியில்ல..இனி இங்க வந்தா டீயும் பன்னுந்தான் சாப்பிடணும் போல.."
                              அப்பா பேசுவதை ஆவென பார்த்து எனைப் பார்த்து லேசாய்ச் சிரித்தாள் அந்தக் குட்டிப் பெண்..இன்னும் சில வருடங்களில் அவள் சிரிப்பு பர்தாவிற்குள் ஒளிந்துவிடும்...

Friday, March 29, 2013

காத்தா இருக்கேன்..

மூச்சுமுட்ட
நீருக்கடியில்
முங்கியிருக்கும்போது
மயங்கிய ஒளியில்
தெளிவின்றி கண்ட
உன் கால் கொலுசின்
பிரகாசத்தில்
முத்தெடுத்து - நான்
வெளிவருகையில்
மீண்டும் எனக்குள்
ஒரு புதிய கவிதை
பிறந்து வெளி விழுந்தது
...
கரையில் காலாட்டி
உட்கார்ந்து எளிதாய்
என் கவியை
விமர்சனம் செய்வதாய்
மேலும் கீழும் பார்த்தாய்..
...
எடுத்த முத்தையே
உனக்குப் பரிசளிக்க
துணைக்கு மலர் தேடி
சுற்றுமுற்றும் பார்க்கையில்
எருக்கம்பூ தவிர
ஏதுமில்லை, என்ன செய்ய?
...
பால் வடிய
பக்குவமா - உன்
பளிங்குப் பல் பார்த்து
தரை மறந்து நடந்து
தடுக்கி விழுந்து
உன் ஒட்டு மொத்த சிரிப்பையும்
ஒரு நொடியில்
உதிர வைக்க
சுத்தி நின்ன மரமெல்லாம்
சில்லுனு சிலிர்த்துப் போச்சு..
...
அன்னிக்குப் பார்த்த
அதே முகம் தான்
இப்ப வரை நெஞ்சுக்குள்ள
கூடு கட்டிக் குடியிருக்கு..
...
ஏதேதோ கோவத்துல
பேசாம இருக்கியே?
என்ன கொஞ்சம்
நெனச்சுப் பாரு..
...
குங்குமம் தொட்டு வச்சு
என்னோட ஆக்கினப்ப
எதுக்காக ஒரு துளி
தண்ணி விட்டு ஒட்டிகிட்ட?
...
சாமி டாலர் போட்டு
'இது தான் டி தாலி'ன்னு
பாசமா சொன்னப்ப
பட்டுன்னு கால் புடிச்சு
நெஜமா பொஞ்சாதி ஆயிட்ட..
...
இப்ப
கொஞ்ச தூரம் போனதுக்கு
கோவிச்சு மூஞ்ச தூக்கி
மௌனத்தில நீ இருந்தா
நான் எங்க போக?
என்ன செய்ய?
..
விதி வசந்தான்
நா இங்க, நீ அங்க..
காத்தா இருக்கேன்
மூச்சா இருக்கேன்
முழுசா இருக்கேன் -நான் இங்க
ஏங்கி இருக்கேன் - நீ அங்க
என் உசிர தாங்கி இருக்க..
பத்திரமா பாத்துக்க
முத்தெடுத்த காதலுக்குப்
பரிசா சாமி தந்த சொத்த..
..
சீக்கிரமா வந்துருவேன்
பேசாம மட்டும் இருக்காத
அன்னந்தண்ணி எறங்கல
அனாதையா நான் இங்க
...



கடைசி மாலைக்காக...

ஒரு காலைச் சூரியனைப்
பார்த்து பெருமூச்சுவிட்டு
புல்லின் மேல்
இறந்து கொண்டிருந்த
அந்த ஒற்றைப்
பனித்துளியோடு - நான்
ஏதேதோ பேசிக்கொண்டிருந்தேன்..
இடையிடையே
இரைச்சலா இசையா
எனத் தெரிந்துகொள்ளவியலா
ஏதேதோ சத்தங்கள்..
வாழ்க்கை தேடி
சில கால்களும்
வாழ்க்கையைத்  தொலைத்து
தேடுவதை நிறுத்திக் களைத்த
சில கால்களும்
காரணம் தெரியாது
எதற்கோ
யோசித்தலின்றி
விரைந்து ஓடும்
சில கால்களும்
இன்னும்
பற்பல இயக்கங்கள்
இயல்பாய் இருந்திருக்க,
நான் மட்டும்
நிலை குத்திய கண்களுடன்
சிந்தனைகளின் எண்ணிக்கை
குறைந்து சூன்யம் நோக்கி
விரைந்து கொண்டிருந்தேன்..
அவ்வப்போது தழுவிச் செல்லும்
அப்போது பிறந்த தென்றலும்
வாழ்க்கையைக் கூவி விற்கும்
சிறகொடிந்த வாண்டுகளும்
எத்தனையோ முகமறியா கால்களின்
தொடர்பில் தெறித்து - என்
முகமூடியை அர்ச்சித்த மண்ணும்
எனையறியாமல் - நான்
குவித்த மண் குவியலும்
கால் புதைந்த ஈரமும்
இன்னும்
சிதைந்து தெளிவின்றி
வராமல் வந்துபோன
காட்சிகளும் - கண நேர கற்பனையும்,
எந்த வதைப்பிலிருந்து
எனைக் காப்பாற்ற
இப்போராட்டம்?
இல்லை,
காப்பற்றப்படுதல் என்ன
அவ்வளவு எளிதானதா?
வேண்டி விரும்பி
மாட்டிகொள்வதும் - பின்
விழி பிதுங்கி
வழி தெரியாது நிற்றலும் தான்
இந்த வாழ்க்கையின் சூட்சுமமா?
இதைக் கடந்து
மகிழ்ந்திருத்தல்
வாய்க்கப்பெறுதல் என்ன
அவ்வளவு கடினமா?
கனமின்றி சுகமாய் சுற்றித்திரியும்
எத்தனையோ உயிர்களின்
மத்தியில் தானே நானும்
நொடிக்குநொடி
தள்ளாடிப் புலம்பித் திரிகிறேன்..
முடிவு தேடிக் கொள்ளும்
தைரியமும் இல்லை..
முன்னோக்கிப் பாயும்
துணிச்சலும் இல்லை ..
எக்காளங்களின் மத்தியில்
மேடை போட்டு
எதற்காக இந்த
நாடக அரங்கேற்றம்?
எப்போது கிடைக்கும்
எனக்கான கைத்தட்டலும்
மாலை மரியாதையும்?
இல்லை
கடைசி மாலைக்காகத்தான்
இந்தப் பரிதாபப் பயணமா?
..
 





Wednesday, March 27, 2013

மலைச்சாரலின் வதைப்பு...

மலைச்சாரல் என்றதும்
என்ன நினைவு வரும்
உனக்கு?
...
பின்னின்றிழுத்த கூந்தலா
இல்லை - நான்
சூடிய சூடக் கூடாத பூவா?
அதன் வாசம் தாங்கிய
ஒற்றை முடியை
பத்திரமாய் எடுத்து
நான் கொடுத்த கைக்குட்டையில்
ஒளித்து வைத்திருக்கிறாய் தானே ?
..
நீ "அவ்ளோதானா" என
முதல்முதலாய்
சொல்லிச் சிரித்த நொடி
இன்னும் என் இதயத்தில்
கல் வெட்டாய்
..
"பொய் சொல்லாத" என
பொய்யாய் நீ வீசும்
கோவப் பார்வைக்காகவே
பல பொய்களைச்
சொல்லியிருக்கிறேன் தெரியுமா?
..
கெட்டவார்த்தை
சொல்லித்தரச் சொல்லி
நச்சரித்தாயே ,
நானும்
எனக்குத் தெரிந்தன தவிர்த்து
உனக்காக ஒரு சில
சொல்லிக் குடுக்க,
பின்னாட்களில்
என்னையே திட்டிச் சிரித்தாயே ,
அழகாகிப் போயின கெட்டவார்த்தைகள்,
அவை தாங்கி நானும்
நீ திட்டிய பெருமிதத்தில்
அலாவுதீன் போல
பறக்க ஆரம்பித்தேன்
..
கடுங்குளிரில்
துண்டு பீடி கேட்டாய்..
இன்னும் என்னென்ன செய்தாய்?
எத்தனை காலம் காத்திருந்தாய்
இவையெல்லாம்
என்னோடு செய்ய?
இன்று
இவை யாவும் இருக்க
உனைத் தேடி நான்
எந்த மலைச் சாரலிலோ
சுற்றித் திரிகிறேன்..
..
மாய்த்துக்கொள்ள
முடிவெடுக்கும் கணங்கள் எல்லாம்
எப்படியோ
எதன்மூலமோ
எனைத் தடுத்து
இந்த வாழ்வின் வலியில்
நீடித்து இருக்கச் செய்கிறாய்
...
கவி எழுதி
எத்தனை காலம் தான்
கடத்தியிருக்க?
நீயின்றி தமிழ் கூட
வதைப்பதாய்த் தோன்றுகிறது..
 ..
இந்த நொடி இருளும்
இன்னும் கொஞ்சம்
இருள் சேர்க்கும்
மயங்கிய உன் நினைவும்
வெளிவர முடியா
சுழலுக்குள் - எனை
சிக்கச்செய்ய
நானும்
சிக்கியிருத்தலையே
விரும்புகிறேன்
..
நீயற்றுப் போன நான்
கூடிய சீக்கிரம்
கவியற்றுப்
போக வேண்டும்
எங்கிருந்தோ
வரம் அனுப்பி
வதைத்திரு கண்ணம்மா..
...


நமக்கான ஆலமரத்தடி...

இந்த நொடியும்
நேற்றைய அந்த நொடியும்
உனக்காக படைக்கப் பட்டது
கடைசி நொடியில்
கண்ணால் இறுக்கி அணைத்து
பிரிவதுபோல் பிரிந்து
தூரம் செல்லும் வரை
திரும்பித் திரும்பி
துள்ளிப் போகும் - உன்
கண்கள் - அவை
தாங்கிய வசீகரம்
...
ஒவ்வொரு முறை
பிரிகையிலும்
"போ, நீ வேணாம் " என்று கூறி
மீண்டும் வந்து
கட்டிக்கொள்கிறாய்..
வறட்டு கௌரவமா உனக்கு?
அதுவும் என்னோடு!
...
என்னோடு பேசித்திரிகையில்
அவ்வப்போது
அலட்சியமாய்
மிகப் பெரிய
விசயங்களைச் சொல்லி
மெலிதாய் சிரிக்கிறாய்...
நான் வியந்து - உனை
ரசித்து ஆழ்கையில்
தலை தட்டி
மீண்டும் இயல்பாய்
உன் சுட்டித்தனத்தால்
எனைச் சிலிர்க்க வைக்கிறாய்
...
சின்னச் சின்ன சோகங்களை
பகிர்ந்து நீ
தோள் சாய்கையில்
எதைச் சொல்லி
உனை நான் தேற்ற?
உன் மௌனமே எனை
சோகத்தின் அடி ஆழத்திற்கு
இழுத்துப் போகுமே!
பின் உன் சோகமுகம் காண
எப்படி முடியும் கண்ணம்மா?
..
முன்பொரு நாள்
முடியாமல் முணகி
முன் வந்து நின்றாய்..
நான் முடிந்தே போனேனே!
உலகின் மிகக்கொடிய
துயரம் - உனை நான்
சிரிப்பின்றி பார்த்தல் தான்..
..
எதிர்காலம் குறித்த
கவலையோடு
ஒரு கோப்பைத் தேநீரோடு
நமக்கான - அந்த
ஆலமரத்தடியில்
நுனிப்புல் கிள்ளி
எதுவும் பேசாமல்
கழித்த பொழுதுகள்
இன்னும் உள்ளே
உறைந்து கிடக்கின்றன
..
ஒவ்வொரு முறை
கவி எழுதி
ஓய்ந்து சாயும்போதும்
கண்ணிமை மூடும் - அந்த
கணப்பொழுதில்
கழுத்தோடு கட்டிக்கொண்டு
நீ சொல்லும் "கண்ணா" வும்
எனக்கான காதலை
வெட்கத்தோடு கசியும் - உன்
கண்ணீர்த்துளியும்
முன் வந்து நிற்கின்றன
...
பேசிய கணங்களை விட
பேசாமல் கைகோர்த்து
கண் பார்த்திருந்த கணங்கள் தானே
நம்மில் அதிகம்..அழகு
...
நினைவிருக்கிறதா?
நான் வைத்த முதல் முத்தத்தில்
நீ விட்ட கண்ணீரில்
என் கடந்த காலம்
கரைந்து போனது
...
நீ வைத்த முதல் முத்தம்
எனை ஒரு கவிதையாக்க
நீ கவி ஆகிப் போனாய்
...
இன்னும் எத்தனை எத்தனை ?
..
இன்றைய உன்
இத்தனை நேர
மௌனம் கூட - எனை
ஒரு விதமாய்
யோசிக்கச் செய்ய ,
வந்த கவிதையைப் பார்
என்ன சொல்ல கண்ணம்மா?
...


Tuesday, March 26, 2013

போ போய் கவிதைய கட்டிக்கோ..

"நீ அழுதிருக்கிறாயா கிருஷ்ணா?"
இது
அவ்வப்போது
கண்ணம்மா கேட்கும்
கொஞ்சல் கேள்வி..
ஒவ்வொரு முறையும்
விடை சொல்லி
முகம் நோக்காது
திரும்பி நிற்கும் கிருஷ்ணா..
அது ஏனெனத் தெரிந்தும்
வேண்டுமென்றே
"சொல்லு! எதுக்கு அழுத?"
என்பாள்..
உடனே
"அமைதியாய் இரு" என
அழுத்தமாய் சொல்லி
காகிதம் தேடி
தொலைந்து போவான் கிருஷ்ணா..
அவன் மீண்டு வருதலைச்
சீண்டிப் பார்க்க
செல்லச் சதித் திட்டம்
தீட்டிச் சரிந்திருப்பாள்..
நடந்தது மறந்து
ஆசையாய் வந்து
அணைக்கத் தேடி
களைத்துப் போவான் ..
பின்
ஊரின் ஓரமாய்
ஒதுங்கிப் போன
ஒற்றையடிப் பாதையில்
சீட்டியடித்து
சிறுவருடன் சண்டையிடும்
சுட்டிப்பெண்ணாக
வேடம் கட்டி
அழகு கூட்டி
தேடி வரும் கிருஷ்ணாவை
கண்டும் காணாது
கடுப்பு செய்வாள்..
கெஞ்சுதலின் உச்சத்தில்
அவள் கால்தொட்டு
கண்ணொற்றி
அவனும் நடிப்பான்..
"அய்யய்யோ" என
கண் கலங்கி,
மீண்டும் சிணுங்கி ,
"போ, போய் நிலா புடிச்சு வா"
என்பாள் ..
அவனும் தாவிப் போய்
கண்ணாடி கொணர்ந்து
"பாத்துக்கோ என் நிலா " என்பான்..
"இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல"
என மேலும் சீண்டி
"என்ன அழ வச்சவன் தானே நீ
போய் உன்
கவிதையையே கட்டிக்கோ" என்பாள்
ஒரு நொடி
தாமதித்தாலும்
இந்தப் புள்ளி மான்
துள்ளி ஓடுமென
தெரிந்து லாவகமாய்
பின்னிருந்து அணைத்து
"போதும் போதும்
இன்னிக்கு கவிதை,
வா போலாம்" என
இந்தக் கவிதையையும்
முடித்து வைத்து
கவிஞனுக்கு
கனாக் காண நேரம் ஒதுக்கி
மறைந்து போவான் கிருஷ்ணா..
...