Tuesday, January 6, 2015

நீயற்ற நம் கனவு

 அந்த வறண்ட நிலத்தின்
நிழல்களற்ற வெளியில்
குளிர் காற்று தேடி
தொலை தூரம்
பறந்திருந்தேன் நான்..
...
நீண்ட நாட்கள்
காத்திருந்த மௌனமும்
வேண்டுமென்றே தனித்திருந்து
எனை நானே
வதைத்துக் கொண்ட வலியும்
நீ விட்டுச் சென்ற
ஒரு பிடி மண்ணும்
அது சார்ந்த பாரமும்
கடக்க வேண்டிய தூரமும்
இமைகளை அழுத்தி
எனை பூமிநோக்கி இழுத்த
உறக்கமும் – எல்லாமும்
ஒன்றாய்ச் சேர்ந்து – எனை
வீழ்த்தி – அந்தப்
பாலைப் புழுதியில் – என்
மொத்தத் திமிரையும்
மண்ணோடு மண்ணாக்கின...
...
அதுவே என்
கடைசி நாளாய்
இருந்திருக்கக் கூடும்..
அவ்வளவு சீக்கிரம்
எனை நீ
சொர்க்கத்துக்கு
அனுப்பி விடுவாயா என்ன?
...
மீண்டு விழிக்கையில்
தொலை தூர மேகத்தினூடே
முகம் காட்டாது
எனை விலகிச்
சென்றிருந்தாய் நீ...
...
கூவி அழைக்கத் துடித்த
என் நாவும் – கூடப்
பறந்துவரத் தவித்த
என் உயிரும்
செய்வதறியாது
தரையில் தத்தளிக்க
எதையும் கண்டுகொள்ளாமல்
உன் விலகியிருத்தலைத்
தொடர்ந்தாய் நீ...
இரக்கமற்றவளாய் நீ
தோன்றிய
ஒரே தருணம் அது...
...
நீ எதைச் செய்தாலும்
அது எனக்காகத்தான்
இருக்கும்...
இதுவரையிலும் – நீ
எனை செதுக்கிய
ஒவ்வொரு தருணத்திலும்
இதை நினைத்துதானே
உனை நம்பியிருந்தேன்..
இப்போது
முகம் கூட
காட்டாது – எனை
முடித்துவிட
முடிவெடுத்தாயோ?..
...
நான் மௌனத்தில்
புகுந்து கொண்டது
உனக்காக மட்டுமே
என்பதை மறந்துவிட்டாயோ?
தெரிந்தும் ஏன்
இந்தப் புறக்கணிப்பு?
...
நீ காணாமல் போன
புள்ளியைப் பார்த்திருந்து
உன் நினைவுகளிலேயே
நான் புதைந்து போவதுதான்
எனக்காக நீ
தேடிக் கொணர்ந்த
சாதல் தாண்டிய
காதலின் பரிசா கண்ணம்மா?
...
அழகின் உச்சத்தில்
நமக்காக நாம் கட்டிய
மர வீடும்
விழுதுகளின் ஊடாக
உன் புடவைகளின்
பின்னலில் உருவான
ஒய்யார ஊஞ்சலும்
எப்போதும் கனன்று கொண்டிருந்த
சருகுகளின் கதகதப்பும்
தெரிந்தும் தெரியாமலும்
நாம் இசைத்திருந்த
பெயரற்ற ராகங்களும்
சின்னச் சிரிப்புகளும்
சீண்டுதலும் – அதன் பிந்தைய
உன் ரகசியக் கண்ணீரும்
அதற்கான என்
வெகுளித்தனமான
சமாதானச் சமிக்கையும்
நினைவில் வந்து போகின்றன...
...
மீண்டெழுந்து
ஆரத் தழுவி
அழுது நீ முடித்ததும்
நான் கேட்பேன்,
“ஏன்டீ, உனக்கு
சூடு, சொரனையே கெடையாதா?”
நீ உன்
உள்ளங்கையக் காட்டி
கண்ணால பேசுவ பாரு,
அந்த நொடி,
நான்
இன்னமும் என்
கண்ணுக்குள்ள
கட்டி வச்சிருக்கேன்...
...
இழக்க முடியாத,
இழக்கக் கூடாத - என்
இரண்டாம் குரல் தானே நீ ...
இப்போ மட்டும்
ஏன் இந்த
அபஸ்வரம் பாடத்
துணிந்தாய் கண்ணம்மா?
...
நீயாக வந்து – உன்
சுவாசம் சேர்த்து
கை தந்து – உன்
மாரோடு அணைத்து
ஒரு துளி கண்ணீர் விட்டு
தூக்கி எழுப்பாவிடில்
இந்த உயிர்
இப்படியேதான்
உறைந்து கிடக்கும்...
எத்தனை யுகங்களாயினும்,
இருக்கின்ற எல்லாமும்
இல்லாமற் போயினும்,
தளிர்க்கக் காத்திருக்கும்
என்
காதலும் – நீ
நாவில் தொட்டுப்
பேச வைத்த – என்
கவிதையும்...
...
இந்தத் தணல் மணலின் தகிப்பும்
உனைத் தேடும் தவிப்பும்
வெறும் கனவாய்
இருந்துவிடக் கூடாதா என்றுதான்
இப்போதும் எண்ணியிருக்கிறேன்...
என்ன செய்ய?
உயிரோடிருத்தலையும்
உணர்வின் உச்சத்தில் இருத்தலையும்
ஏன்
உயிரற்றிருந்த ஒருசில கணங்களையும்
உனைத்தவிர
யாரெனக்குத்
தந்துவிட முடியும் கண்ணம்மா?
..
நான் பிறந்ததும்,
வாழ்ந்ததாய் நம்பியிருந்ததும்
இப்போது சகித்துக்கிடக்கும்
நீயற்ற வலியும்
என்னாலன்றி உன்னால்தானே
சாத்தியம் கண்ணம்மா?
..
ஒருவேளை
உன் நீண்ட துயிலின்
அழகிய கனவின்
ஒரு வேண்டா இடைச்செருகல்
கதாபாத்திரம்தானோ நான்?
இல்லை,
நான் நம்பியிருப்பதுபோல்
நீயற்ற நொடிகளனைத்தும்
நான் – வெறும்
கனவில்தான் வாழ்கிறேனா?
இல்லை,
நீயே என் கனவு மட்டும்தானோ?
...
பதில் சொல்லவாவது
என் கனவில் – இல்லை
என் கனவாய்
வந்து போ கண்ணம்மா..
...


Sunday, January 4, 2015

நீயற்ற நம் ஊர்

நேற்றைய தூக்கமற்ற இரவில்
இடையிடையே – வந்துபோன
ஏதேதோ முகங்களுக்கிடையே
தொலைவில்
ஒரு கூட்டத்திலிருந்து
நீ
என்னை அழைத்தாய்...
...
பிரமையாகத்தான் இருக்குமென்று
கண்டுகொள்ளாது
இசையில் மூழ்கி
இளைப்பாறப் பார்த்தேன் ...
பாடல்கள் தொலைவில் போய்
உன்குரலில்
ஒலிப்பதாய்த் தோன்ற
எனக்கு நானே முணகி
உன் குரலை
விலக்கியிருக்க முயன்றேன்..
...
வேண்டுமென்றே
விளக்கனைத்தும் அணைத்து
இருளில் மூழ்கிப்போய்
உன் நினைவில்
சிறிது நேரம்
நிலைத்திருந்தேன்..
உண்மையில் – அது
நீண்ட நேரம்
நீடித்திருக்க வேண்டும் ..
....
உறங்கி விழுந்து
திடுக்கிட்டு – உன்
மடியில் – உன்
மூச்சுக்காற்றில் – உன்
சுருள் கூந்தலின் ஊடே
நீ
‘கண்ணா’ என அழைக்க,
சூரியனின் முதல் கற்றை
எனை
சுய நினைவிற்குள் இழுத்தது..
....
தினசரி
உனக்குப் போட்டியாக
முன்னெழ முயற்சித்து
தோற்றுப்போகும்
சூரியன் – இப்போதெல்லாம்
மேக தேவதையின்
உள்ளங்கைச் சூட்டில்
உற்சாகமற்று
உறங்கிக் கிடக்கிறான்...
...
எனக்காக வந்து போன
நிலவும் – நீ
சுட்டிக்காட்டி கதைசொன்ன
சோடி நட்சத்திரங்களும்
நெடிதுயர்ந்த
மரங்களின் பின்
ஒளிந்துகிடக்கின்றன
...
அவைகள் ஒன்றுகூடி
இதுவரை யாரும் கேட்டிராத
ராகமொன்றை இசைக்கின்றன
சுகமா சோகமா – என
சொல்லவொண்ணா அது
எனக்கு மட்டும்
இமை மூடும் போதெல்லாம்
கேட்கிறது..
அவ்விசை எனக்கு
ஏதோ சொல்ல நினைப்பதாய்
நான் நினைத்துத் தவிக்கிறேன்...
...
எனக்கு மிகவும் பிடித்த - நம்
இரு சக்கர வாகன சவாரி
இப்போது
இயந்திரத்தனமாகி
திசையற்று அலைந்து திரிகிறேன்...
வழியே,
வழக்கமாக வணங்கிப் போகும்
ஐயப்பன் கோவிலையும் மறந்து,
ஊடே நான் முணங்கும்
“பூவாசம்” பாடலற்று,
வார்த்தையற்ற,
காற்றற்ற,
வண்ணமற்ற – ஏதோ
ஒரு தொலைதூர உலகில்
நான்
பயணித்திருக்கிறேன்...
...
கடந்து போகும்
கிராமங்களெல்லாம் – நான்
இதுவரை காணாதன...
கூடவே வருகின்ற
நீண்ட மலைத்தொடரும்
இப்போது
ஆழமான பள்ளத்தாக்காய்
மாறிவிட்டது..
...
யானைப் பாதையாய்
உனை பயமுறுத்திய – அந்த
ஆளற்ற நெடுநிலம்
எங்கே போயிற்று?
...
உன் புன்னகைக்காகவே
ஒருமுழம்
அதிகம் தரும்
பூக்காரப் பாட்டியும்
அவள் பெட்டிக்கடையும்
எங்கே?
...
நாம் இருவரும்
சோடியாய் முகம்பார்த்து
லேசாகச் சிரித்துப் போகும்
சாலையோர கண்ணாடிக் கடையும்
காணாமல் போனது ஏன்?
...
ஒரு நாள் விடாமல்
உனைக் கேட்டுப் போகும்
பக்கத்து வீட்டு ராஜி
எனைப் பார்த்து முறைப்பதாய்த்
தோன்றுவது ஏன்?
...
எப்போதும் கவிதையில்
அழகைக் கூட்டும்
என் வார்த்தைகள் – இன்று
தறிகெட்டுப் போவதேன்?
...
இன்று நீ அனுப்பிய
நீல வண்ணப் புடவை
நிழற்படத்தைப் பார்த்து
தங்கச்சி கேக்குறா
“அக்காக்கு வயிறு வந்துருச்சுலா?”ன்னு
எனக்கென்னவோ
என் வயிறு பெருசான மாதிரி
வெட்கம் வேறு...
எனக்கு நானே
சிரிச்சுக்குறேன்..
...
இன்னும் கொஞ்ச நாள்தான்னு
உன் மனச தேத்திவிட்டுட்டு
இப்படி நான்
பொலம்பறேன் பாரு கண்ணம்மா!
...
சரி சரி
மறக்காம மாத்திரய  சாப்பிட்டு
நல்லாத் தூங்கு
நானிருக்கேன் உங்கூட ...
...
நீயும் எங்கூட
.....






Friday, January 2, 2015

நீயற்ற நம் வீடு


நீயற்ற நம் வீடு
எனை தினந்தோறும்
வெறித்துப் பார்க்கிறது..
...
தூங்கும்போதும்
கனவுகளின் இடையிலும் – பின்
விழித்தெழுந்து
உள்ளங்கை சேர்த்து
நமக்கு மட்டுமே வருகின்ற – காதல்
ரேகைப் படகைக் கண்டு – நான்
உன்னை நினைத்துச் சிரிக்கையிலும்,
உன் வாசம் ஈர்த்து
கோவிலாகிப் போன – நம்
படுக்கையறைச் சுவர்கள்
எனைப் பார்த்து
ஏதோ கேட்கத் துடிக்கின்றன..
...
நன்றாக வந்துகொண்டிருந்த
சமையலறைச் சில்லுக் குழாய்த் தண்ணீரும்
எனைப் பார்த்து
ஏதோ சொல்லிச் சிணுங்குகிறது...
..
உனக்காக நான் வரைந்த
உனக்குப் பிடித்த யானை முகமும்
எனக்குப் பிடித்த சிவரூபமும்
சேர்ந்த தியானச்சாமி
எனைப் பார்த்து
முகத்தைத் திருப்பிக்கொள்கிறது
...
“தினசரி தண்ணீர் விடு!!”
என நீ சொல்லிப் போக
இல்லாத பழக்கத்தை
இஷ்டப்பட்டு பழகி
அது வாடாமல் பார்த்து,
உனைத் தேடியிருக்கும்
பொழுதுகளில் – என்
பால்கனித் தோழியாகியிருந்த
துளசிச் செடியும்
எனைத் தவிர்த்து
நேற்று முளைத்த
அருகம்புல்லோடு
ஆசை வார்த்தை பேசி
எனைப் பாடாய்ப் படுத்துகிறது
...
சரி! அதுதான் போகட்டும்...
நீ மட்டுமே உலகை ரசிக்கும்
குளியலறைச் சன்னலில்
சமீபத்தில் ஒரு சிட்டுக்குருவி...
நான் பார்க்காத நேரத்தில்
நேர்த்தியாக கூடுகட்டி
குடிவந்து சேர்ந்தது...
என்ன தைரியம்!
...
இது தெரியாமல்
உனக்குப் பிடித்த ஜிங்கிலமணி
பாடலை நான்
கொலை செய்து
கர்நாடகத்தில் கத்தித் தொலைக்க
அந்தச் சின்னஞ்சிறு குருவி,
சொல்லாமல் கொள்ளாமல்
காணாமல் போனது..
...
அது தாய்வீட்டிற்கு
போக முடியாமல்
அடைகாக்க – நம் வீடு
தேடி வந்திருக்கும்...
...
நான் இப்போது
உன் குளியலறைப் பக்கம்
போவதேயில்லை,
அது விட்டுச் சென்ற கூட்டை
இன்னும் அதே இடத்தில்
விட்டு வைத்திருக்கிறேன்
நீ வந்து – எனக்குப்
பாவ விமோசனம் கொடு
கண்ணம்மா...
....
சமீபத்திய – என்
கவியுணர்ந்த அக்கா ஒருத்தியும்
கண்ணீர் விட்டு
“கண்ணம்மா குடுத்து வச்சவ” ன்னு
இன்னும் கொஞ்சம்
உம்முகத்த – என்
நெஞ்சுக்குள்ள
பச்சக்குத்தி விட்டுட்டா...
...
நான் என்னதான் செய்ய?
நீயே சொல்லு கண்ணம்மா!
...
நீ
நிறைமாதம் ஆறதுவர
என்
சிறைவாசம்
கொடுமை கண்ணம்மா!
...
நீயில்லாத
நம் வீட்டை – இனி
நீங்கியிருக்கவே நினைக்கிறேன்..
ஆனாலும் - நீ
கிழிக்காமல் விட்டுச் சென்ற
போன வருஷ நாள்காட்டியும்
இன்னும் அணையாத
காமாட்சி விளக்கும்
சுவரொட்டிய – சோடி
மயிலிறகும்
இடைச்சொருகி
எனைப்பார்த்து
ஏளனமாய்ச் சிரிக்கும் – உன்
நிழற்படமும்
எனை எங்கு போயினும்
ஈர்த்துவந்து
உன் வாசத்தில்
உருக வைக்கின்றன...
..
இப்போதைக்கு ஆறுதலாய்
உன் துப்பட்டாவைச்
சுற்றிக்கொண்டு
வான் பார்த்து நானும்
எனைப் பார்த்து நிலவும்...
...