Wednesday, January 4, 2012

அசையும் நிலா

உன் காலடி பட்ட
கருங்கல் வாசம்
நிலவில் நாம்
கண்டெடுத்த
கறுப்புப் பூவின் வாசத்தை
நினைவுபடுத்துகிறது!

நீ வீசியெறிந்த
சுருள் முடி - என்
சட்டைப் பையில் இருக்க
இதயக் குழாய்களும்
சுருண்டு கிடக்க
அடம் பிடிக்கின்றன !

உன் வயிற்றுவலி
என் வயிற்றுப்பசியை
மறக்கச் செய்கிறது!
இதுதான்
இரத்த சம்பந்தமா?

தயங்கித் தயங்கி
சொல்ல முடியாததைச் சொல்லி
"சீ" என
தலையில்
அடித்துக் கொண்டாய்
உன் வெட்கத்தில்
நானும் பங்கு கொண்ட
தருணம் அது!

அதென்ன ?
குழந்தைக்குப்
பாலூட்டும்போது மட்டும்
என் கண்களை
நேராகப் பார்ப்பதில்லை
நீ!

நிஜமான கோவத்திலும் கூட
உன் கண்கள்
விளையாடவே செய்கின்றன!

உன் மூலை முடுக்குகளை
என் முத்தக்காற்று
குத்தகை எடுத்துவிட்டதாம்
பொறுத்துக்கொள் !

நீ
நிஜமாகவே
உயிரோடு தான் இருக்கிறாயா?
இல்லை
அவ்வப்போது
என் கனவில்
வந்து போகிறாயா?

நீ
ரகசியமாய் சொல்லும் எதுவும்
எனக்குக் கேட்பதேயில்லை

உன்
தவறிய
அழைப்புகளின்போதும்
நான்
பேசிக்கொண்டுதான் இருக்கிறேன் !

உன் முதல் முத்தத்தில்
நிலைகுத்திய
என் கண்கள் உயிர்பெற
மீண்டும் ஒரு
முத்தம் கொடேன்!

உன்
குறும்புப்பார்வையுடன்
குழந்தையாய் விளையாட
எனக்கும்தான் ஆசை !

உன்
அமைதிதான்
அதிகம் பேசுகிறது!

உன்
பாத வெடிப்பிலிருந்து
விழுந்த மண்ணில்
பொன் விளைகிறதாம்
பொய்யில்லை !

என் இடதுகையும்
உன்னைப்பற்றி
எழுதத் துடிக்கிறது
என்ன செய்ய?

ஆங்கிலத்தில் வருணித்தால்
அந்நியமாகிப் போவாய் நீ
அதனால்தான் தமிழ்கிறேன்!

தலைகீழாய் பார்த்தாலும்
உன் நிழற்படம்
நேராகச் சிரிக்கிறதே
எப்படி?

உன்
முடியாத பொழுதுகளின்
கண்ணீர் தாங்கிய
கைக்குட்டை
எப்போதோ
முக்தி அடைந்துவிட்டது
தெரியுமா உனக்கு?

உனைப் பார்த்த கண்கள்
என்னிடமிருக்கின்றன
யாராவது
கண் போட்டு விடாமல்
சுத்திப் போட வேண்டும்!

நீ
நேரம் கேட்டதிலிருந்து
என் கைக்கடிகாரம்
கண்ட நேரத்தில்
அலாரம் அடிக்கிறது!

உன்
பார்வைக்குப் பதிலாக
நான்
என்ன தந்துவிட முடியும்?

நீ
முணுமுணுக்காத பாட்டெல்லாம்
ஒரு பாட்டா?

நீ போகும்
சாலையோரம்
பூங்கா எதற்கு?

வேண்டுமென்றே - உன்
தலையில் சிக்கிய பூக்களை
என்ன செய்கிறேன் பார்?

என் மீசையின்
வெள்ளைமுடிக்காக
விரதமிருந்து
மூக்கு குத்தியவள்தானே நீ?

நீ அழகாய் இருக்கிறாயாம்
என் தோழி சொல்கிறாள்
பெருமையாகத்தான் இருக்கிறது !

நீ வந்த பிறகு
தூக்கம் வருவதில்லை
கனவு வருகிறது!
ஆனால்
என் கனவில்
நீ மட்டும்
அழகாய் தூங்குகிறாய் !

நீ
அசையா நீரூற்று !
அசையும் நிலா !
பிசகா ஓவியம் !
பிசகிய தென்றல்!
முடியா தூரம் !
முடியும் பாரம் !
ம் .. ம் .. ம் ..
கவிதை
வறண்டு போய்விட்டது
உனைக் கொஞ்சம்
குடித்துக் கொள்ளவா?

கவிதைக் காதல்

நிறைய பார்த்தலை விட
நினைத்துப் பார்த்தல் சுகம்!

உனக்கான இன்றைய
காத்திருத்தலில்
நாளைய கவிதை கருவானது!

உன் உதடு துடிப்பும்
என் இதயத் துடிப்பும்
எப்படி
ஒரே நேரத்தில் சாத்தியம்?

கண் மூடினாலே
வந்து விடுகிறாயே
நீ என்ன
நிகழ் காலத்தின் நித்திரையா?

நமக்கான மௌனம்
நமக்குள்ளே முடியும்!
.
.
இப்படித்தான்
என் கவிதைக்கு
உன் மேல் காதல்!
காவியமாகி விட்டது!

காதல் கவிதை

உனைப் பற்றிய
என் கவிதைகளில்
இலக்கணப் பிழைகள்
இருக்கத்தான் செய்யும்!
என் கவிதைகளை
நான் எழுதுவதில்லையே
நீயே எழுதிச் செல்கிறாய் !
.
.
காதலின் முடிவிலா
கவிதை கேட்டார்கள்
நம் முதல் சந்திப்பை
பதிவு செய்து விடவா?
.
.
காகிதத்தில் அல்ல
உன்
கால் பதத்திலேயே
பிறக்கிறது
என் கவிதை!
.
.
உனைப் பார்ப்பதற்கு
முந்தைய - என்
கவிதை முயற்சிகள்
இப்போது
சிரிக்க வைக்கின்றன
.
.

காதல் சூல்

விதையில்லா விருட்சம்
உன் கண் !
உன் பார்வைப் பூக்களின்
மகரந்தம் - எனை
காதல் சூல்
கொள்ளச் செய்தது !
ஆண்மையிலும் தாய்மை - உன்
அரை நொடிப் பூத்தலில்!
மணமாகுமுன்னே
மயக்கமும் மசக்கையும்
எனக்கு!
உன் குழந்தையை
காப்பாற்றவாவது
கட்டிக் கொள் - எனை
காதல் கொள் !
.
.
.
இன்னும்
கொடி அறுக்காமல்
வளர்கிறது!
நீ போட்ட
விதையில்லா விருட்சம் !
அடுத்த இமைத்தலுக்குள்
என் ஆயுள் முடிய
வரம் கொடேன்!